Seedevi

“லயத்து கோழிகள்” தொழிலாளர்களின் வாழ்க்கையை புத்துயிர்க்கும் ஒரு கலைப் படைப்பு

நந்தன நன்னெத்தி.

எழுத்து, இயக்கம் மற்றும் இசை: இராசையா லோகானந்தன்

ஆடை வடிவமைப்பு: க. வசந்தப்ரியா

தயாரிப்பு நிர்வாகம் மற்றும் ஒப்பனை: செல்வராஜ் லீலாவதி

நாடகப் பொருட்கள்: மு. நவநீதன்

தயாரிப்பு: தியேட்டர் மேட்ஸ் பண்பாட்டுக் கழகம் 

Kotiyagala
Estate worker audience at Kotiyagala Estate

வீதியில் அல்லது மேடையில் அரங்கேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்நாடகம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சித்தரிக்கிறது. இராணுவம், பொலிஸ், தோட்ட முகாமையாளர்கள் மற்றும் சில தொழிற்சங்கத் தலைவர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி ஜூலை 9 அன்று இதன் முதல் காட்சி இடம்பெற்றது. பின்னர் இந்த நாடகம் ஜூலை 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் கெர்க்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவு மற்றும் கெம்பியன் மேற்பிரிவு ஆகிய தோட்டங்களில் அரங்கேற்றப்பட்டது. மற்றும் எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றப்படவிருக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நாடகம் நடத்தப்படுவதை புலனாய்வு வலையமைப்பின் ஊடாக அறிந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவப் பிரிவு அதிகாரி தமது தளத்தில் தாம் அறியாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று நாடக நெறியாளருக்கு தொலைபேசியில் அறிவித்தார். இன்னும் இதுபோன்ற  பல தடைகளை நாடகக் குழுவினர் எதிர்கொண்டனர். 

நாடக இயக்குனர் லோகானந்தன்,தான் சந்தித்த இக்கட்டான சூழலை “என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ஜூலை 9” என்ற தலைப்பில் முகப் புத்தகத்தில் பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.

“இந்த நாள்,நான் பிறந்து வளர்ந்த எனது சொந்த தோட்டத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினேன். கொட்டியாகலை மேற்பிரிவு எனது தோட்டம். பொகவந்தலாவ எங்களுக்கு அருகில் உள்ள நகரம். நாடகத்தை நான் எனது வாழ்வாக்கிக்கொண்டேன். அதற்கு விதை போட்டதே எனது கொட்டியாகலை தோட்டம்தான். மிகச்சாதரணமாக தொடங்கப்பட்ட இந்த நாடக நிகழ்வானது இறுதியில் பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் மிகப்பெரிய அளவில் அடிப்பட்ட சமூகத்தின் எழுச்சியாக மாறிப்போனது. “லயத்துக் கோழிகள்” ஒரு வரலாற்று நிகழ்வாகிப் போனது. இந்த பதிவு நாடகத்தை பற்றியதல்ல. எங்கள் மக்களின் மனத்துணிவு பற்றியது. எங்களின் (நாடகக் குழுவின்) அர்ப்பணிப்புகளும் எதிர்ப்பார்ப்புகளும் நொறுங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த அதிசயம் சற்றென நிகழ்ந்தது. நாடகம் போடக்கூடாது என்று கடுந்தொனியில் கூறியவர்களை மிகச்சாதரணமாக கையாண்டார் எனது அருமை அண்ணா தனாஸ் அவர்கள். இவர்  எங்கள் தோட்டத்தின் முன்னாள் போராட்டக்காரரான மரியசூசை மாமா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்காக என்னோடு தோள் நின்று உழைத்த என் அருமை தம்பிகள் பிரகாஷ் மற்றும் விமல்காந்த் ஆகியோரின் முயற்சியும் ஈற்றில் அவர்களின் தற்துணிவும் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. இவர்களின் இந்த செயல் ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு பின்னர் அடம்பன் கொடிகள் திரள்வதை என் தொலைபேசி இதுவரை உறுதி செய்து கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு அறிவார்ந்த மாற்றம் நிகழ்வதற்கான அறிகுறி தெரிகிறது. அன்றைய தினம் நாடகம் நடைபெறவில்லை என்பதை அறிந்து இருப்புக்கொள்ளாமல் தவித்து நின்றவர்கள்,நாடகம் நடைபெறுகிறது என்பதை அறிந்தவுடன் ஓடோடி வந்ததையும் நான் உணர்ச்சிப் பொங்க பார்த்து பூரிப்படைந்தேன். நாடக நிகழ்வுக்குப் பின்னர் என்னை ஆரத்தழுவி முத்தமிட்டவர்கள் எத்தனை பேர். அவர்கள் கண்களில் எத்தனை சந்தோசம். குழந்தைகளின் முகத்தில் எத்தனை சந்தோசம். இவர்களுக்காக நாங்கள் நாடகம் போட்டே ஆக வேண்டும். எங்கள் பயணம் இன்னும் தொடரும். ஒரு பெருங்கூட்டமாக நாங்கள் ஆர்ப்பரிப்போம்.”

மேலே குறிப்பிட்டுள்ள சூழலைப் பற்றி மட்டுமே நாம் நினைத்தாலும், வரலாற்று மாற்றத்தை தவிர்க்க முடியாமல் அழைக்கும் போராட்டத்தின் அடையாளமாக ‘லயத்து கோழிகள்’  உள்ளது. நாடகத்தின் அசாதாரண வடிவமும் இத்தகைய சமூகத் தேவையிலிருந்து எழுகிறது.

இது ஒரு கோழி திருட்டு பற்றிய கதை. முருகன் ஆண்டி (எம். அஜந்தன்) மற்றும் ஆண்டி முருகன் (அ. நவநீதன்) ஆகிய இருவரும் கோழி திருடர்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு திருடுகிறார்கள். நாடு முழுவதும் கோழிகள் திருடப்பட்டு வருகின்றன, மக்கள் தங்கள் கோழிகளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க போராடுகிறார்கள். இந்தப் போர் ஏழை பெண் (எஸ். சீதேவி), அவரது இளம் மகன் (எஸ். வசீகரன்) மற்றும் அவர்களை ஆதரிக்கும் மற்றொரு பெண் (கலையரசி) ஆகிய மூவரால் சித்தரிக்கப்படுகிறது. நாடகத்தில் திருடர்களுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலை உயர்த்தி, ஏழை பெண் தனது கோழியை பராமரிக்கும் பொறுப்பை இளைய தலைமுறையை குறிக்கும் மகனிடம் ஒப்படைக்கிறாள். திருடர்கள் அவரிடம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றி கோழியைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள், ஆனால் தோல்வியுறுகிறார்கள், இறுதியாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கோழியைக் கடத்திச் செல்கிறார்கள். ஒரு மந்திரவாதி (எஸ். லீலாவதி) ஏகாதிபத்திய ஆடையை அணிந்து, கோழியை கைப்பற்ற நினைக்கும் இரண்டு  திருடர்களின் போராட்டத்திற்கு நடுவராகி, கோழியின் வயிற்றில் இருந்து பணக்கட்டை  இழுத்து அவற்றை தனது பையில் போட்டுக் கொள்கிறார். திருடர்கள் எடுப்பதற்காக சில நாணயங்கள் தரையில் வீசப்படுகின்றன. திருடர்கள் பேராசை கொள்கிறார்கள், மந்திரவாதி அவர்களிடம் இரண்டு தீப்பந்தங்களைக் கொடுத்துவிட்டு கோழியை எடுத்துச் செல்கிறார்.

Loganathan
Director Loganathan with his fans

அப்போது அந்த ஏழை, “நாங்கள் வாழ்நாள் முழுவதும் சேவலைத் தேடுகிறோம். ஆனால் உண்மையில் நாம் தொலைத்தது என்ன? அதுதான் எங்கள் வாழ்க்கை” என்று உறுதியான இதயத்துடன் அறிவிக்கிறார். வாழ்க்கையைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லாத அவள் உட்பட தொழிலாளி வர்க்கம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. “நாங்கள் எங்கள் உயிரை இழந்துவிட்டோம்,” என்று கெர்க்கஸ்வோல்ட்  தோட்டத்தில் ஒரு தொழிலாளி நாடகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் எங்களுக்கு முன் கூறினார். இந்த வார்த்தைகள் பொதுவாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் எதிரொலிக்கும்.

இரண்டு திருடர்களும் ரகசியமாக ஒரே கோழியை திருட முயல்வது, கடைசி நேரத்தில் இந்த செயலில் பெண் தலையிட்டு திருடர்களின் நோக்கத்தை முறியடிப்பது, இது மீண்டும் மீண்டும் நடக்கிறது, கோழியை பாதுகாக்கும் பொறுப்பை இளைய தலைமுறை மகனிடம் ஒப்படைத்த பின் திருடர்களுக்கு இடையே போட்டி வலுக்கத் தொடங்குகிறது. லோகாநந்தன் வியத்தகு தருணங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனது படைப்பாற்றலை நிரூபித்தது மட்டுமல்லாமல், நாடகத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். 

இரண்டு திருடர்களாக நடிக்கும் இரண்டு முக்கிய நடிகர்களின் நடிப்பு பாணி, அந்த கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையையும் எதிர்ப்பையும் கொண்டு வருகிறது, மேலும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்கும் மற்றும் தங்கள் இரத்தமும் வியர்வையும் சார்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட தீய ஆளும் வர்க்க போக்குகள் காட்டப்படுகின்றன. இந்த நடிகர்களின் உடைகள், இசையமைப்பு, பாவனைகள் போன்றவற்றுக்கு மலையகக் கூத்து மரபைப் பயன்படுத்தி, தொழிலாளிகளின் வாழ்க்கையிலிருந்து விலகி கதாபாத்திரங்களைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் லோகானந்தன். மேலும், தொழிலாளிகளின் கோழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொத்தை சொந்தமாக வைத்து திருடர்களுக்கு அற்ப காசு கொடுக்கும் மந்திரவாதியின் உடைகளும் நடிப்பும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு. யதார்த்தமான மற்றும் பகட்டான நடிப்பு மரபுகளின் போது யதார்த்தமான பாணிக்கு நெருக்கமாக இருக்கும் வகையில்  கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு தங்களை தாங்களே பார்க்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

thieves
Thieves – M. Navaneethan, M. Ajanthan

 கூத்துகளில் பயன்படுத்தப்படும் தாளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதன் ஊடாகவும், மலையகத்தில் பயன்படுத்தப்படும் தப்பு இசைக் கருவியிலிருந்து எழுகின்ற இசையின் ஊடாகவும் தோட்டத் தொழிலாளர்களின் சூழலையும் அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதோடு எம்மையும் அதனோடு இரண்டற உறவு கொள்ள வைக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய தொழிலாளர்கள் கடல் தாண்டி இலங்கையின் காடுகளின் வழியாக மலைகளுக்குச் செல்லும் கடினமான பயணத்தின் போது கொடிய விலங்குகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கு  தப்பு எனும் இசைக்கருவியை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

estate workers
Estate Workers -S. Seedevi, S. Kalei Arasi

இந்த நாடகம் தொழிற்சங்கங்கள் மற்றும் நேசவாத வலதுசாரி போலி-இடது முன்னணிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முதலாளித்துவ சமூக அமைப்புக்கு ஒரு சவாலாக உள்ளது, மேலும் அது பறிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளித்துவத்தின் கீழ் ஒருபோதும் வெல்ல முடியாது என்பதால் தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதனாலேயே, லயத்துக் கோழிகள் ஒரு யதார்த்தமான கலைப் படைப்பாகக் கருதப்படுகிறது, இது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தூண்டும் ஒரு கலைப் படைப்பாகும்.

நாடகம் ஆரம்பம் முதல் இறுதிவரை வெளிப்படுத்தும் உணர்வுகள் வர்க்க இயல்புடையதாகவும், உழைக்கும் வர்க்கத்தின் மனநிலையைத் தூண்டுவதாகவும் இருப்பதால், தற்போதைய சமூக வளர்ச்சியின் வரலாற்றுத் தேவையைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பாகவும், படைப்பாளிக்கு என்ன சமூக நிலைமைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Magician
Magician – S. Leelawathie

இதற்கு ஏற்கனவே மேற்கோள் காட்டப்பட்ட இந்நாடக ஆசிரியரின் கூற்று நிறைவானதாகும். இலங்கையில் தற்போது இருநூறு வருட மலையக மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் எழுதப்படுகின்றன. கொண்டாட்டங்கள் ஊடாக  தங்களைப் பற்றி சிந்திக்க அம்மக்கள் தூண்டப்படுகிறார்கள். கோவிட் எனும் தொற்றுநோய் பரவி கடந்த நான்கு வருடங்களில் வர்க்க சமூகத்தின் நெருக்கடிகள் அடக்க முடியாதவாறு தொடர்கின்றன. கொண்டாட்டங்களோடு மேற்கூறிய செயல்பாடும் மலையக மக்களின் உணர்ச்சியை தூண்டுகிறது. இதற்கிடையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹட்டன் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த  இஷாலினி என்ற பள்ளிச் சிறுமி தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட 2021 ஜுலை சம்பவமும் இம்மக்களின் மனதைவிட்டு அகலவில்லை என்பதும் நாங்கள் இவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இருந்து தெரிய வருகிறது. இஷாலினி மலையக மக்களின் வாழ்க்கை‌ விதியின் அடையாளம். கல்வி, வேலைவாய்ப்பு, வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை சொற்பமாக பெற்றுக்கொண்டிருக்கும் தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள், தமது பிள்ளைகள் போதைப்பொருளுக்கு ஆளாவது போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொழிற்சங்கங்களும், முதலாளித்துவ அரசியலும் ஏற்படுத்திய அவலங்களும், அவர்களின் வணிக தந்திரோபாயங்கள் உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்குவதும் பிரச்சனையாகி விட்டது. இதற்கிடையில், நிலையற்ற முதலாளித்துவ அரசாங்கங்கள் எந்தவொரு ஜனநாயக உரிமையையும் தாக்குவதில் உறுதியாக உள்ளன. வாழ்க்கை நிலைமைகளின் கொடூரமான வீழ்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில், தங்கள் பெற்றோர்களுக்காக அவர்களின் பிள்ளைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள் எனினும் அவை தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன.  தோட்டத்தில்  பிறந்து தோட்டத்தில் வளர்ந்த உண்மையான கலைஞனால் இந்த சமூகத்தில், இவற்றை சகித்துக் கொண்டு இருக்க முடியாது.

Seedevi
S. Seedevi, S. Waseekaran

இந்த கசப்பான உண்மையை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் மற்றும் கொடுங்கோல் ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலமான நடிகையான எஸ்.  லீலாவதியின் மந்திரவாதி பாத்திரம் சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அவரது அற்புதமான நடிப்பால் நாடகம் உச்சம் அடைகிறது. குறிப்பாக, தான் நடிப்பு கலையில் தேர்ச்சி பெற்ற நடிகை என்பதை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்ட சமூகத் தேவையைப் புரிந்துகொண்டு கருத்து ரீதியாக மீண்டும் உருவாக்கி, நடிப்பில் தனித்து நின்றார். ஏழைப் பெண்ணாக நடித்த எஸ். சீதேவியின் கதாபாத்திரம் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருடர்களாக செயல்பட்ட எம். அஜந்தன் மற்றும் எம். நவநீதன் ஆகியோர் லீலாவதி செய்த சாமர்த்தியத்தை  அடைந்து கொள்ள முடியும் என்பதும், பாத்திரங்களின் சமூகச் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தமது ஆற்றலை இன்னும் சீர்படுத்துவதன் மூலமும், நாடகத்தை இன்னும் தரமுயர்த்த முடியும் என்பது தெளிவாகிறது. பயிற்சிப் பருவத்தினரான எஸ். வசீகரன் வசனங்களை வெளிப்படுத்துவதில் காட்டிய திறமையை உடல்மொழியிலும் மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

நவநீதனின் நாடகப் பொருட்கள் சிறப்பாக உள்ளன. சேவல்,  கூடு மற்றும் உபயோக பொருட்கள் குறிப்பாக துப்பாக்கியினை ஒரு பொம்மையாக தெளிவாகக் காணக்கூடிய வகையில், நாடகத்தின் கருப்பொருளுக்கு சக்திவாய்ந்த முக்கியத்துவம் கொடுக்க அவர் பங்களித்திருக்கிறார்.

இவ்வாறான ஆக்கங்களைத் தடுக்க ஆளும் வர்க்கம் அண்மையில் எடுத்த ஒரு நடவடிக்கை, கலைஞை நடாஷா எதிரிசூரியவை ஒரு கலைப் படைப்புக்காக கைது செய்தமையாகும்.1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கம் கலைக்கு எதிராக வலுவான தாக்குதலைத் தொடுத்தது. அன்று முதல் வேட்டையாடப்பட்ட கலைஞர்கள் ஏராளம். பல வருடங்களுக்கு முன்னர் பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கிய “வெளிச்சம் வெளியே இல்லை” என்ற நாடகம் தேசிய மட்டத்தில்  இறுதிப் போட்டிக்கு தெரிவானதையடுத்து, சமூக பிரச்சினைகள் சார்ந்த நாடகங்களை மாணவர்கள் உருவாக்குவதை தடை செய்து, கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, புராதன கதைகளை அல்லது அவற்றை புதிய வடிவில் படைப்பதற்கு மட்டுமே  மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உரையாடல் செந்தமிழில் இருப்பது கட்டாயமாகும். நாடக போட்டி நடுவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுப்படி, ‘நாடகத்தில் அரசியல் கருத்துகளுக்கு தடை’, ‘மதங்களை இழிவுபடுத்தக் கூடாது,’ போன்றவை அடங்கியுள்ளன.

அதுபோலவே உலகெங்கிலும் உள்ள அரசுகள், கலை, கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்துகொள்வதில்லை. கலைச் சுதந்திரத்திற்காக முதலாளித்துவத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட கலைஞர்கள் மட்டும் கலை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் உடனடியாக இறங்கலாம். சமூக யதார்த்தத்துடன் தொடர்பில்லாத ஒரு கலை எந்த வகையிலும் சிறந்த கலாச்சார முன்னேற்றத்திற்கு உதவாது. இதன்மூலம், சமூக வளர்ச்சியின் பயனை ஏற்றுக்கொண்ட உண்மையான கலையை, ‘லயத்து கோழிகள்’ நாடகத்திற்கு எதிரான இயக்கத்தை தோற்கடித்த உழைக்கும் வர்க்க சக்தியின் வேகத்தை பாதுகாக்க முன்முயற்சி எடுக்க முடியும். அதன்படி, தொழிலாளர் போராட்டக் குழுக்களில் ஒரு மக்கள் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கி, அனைத்து பிரிவுகளையும் தாண்டி, சகோதரத்துவத்தின் கரத்தை நீட்டுவது இன்றைய கலைஞர்களின் தலையாய சமூகப் பொறுப்பாகும். லோகானந்தன் குறிப்பிடுவது போல் நாங்கள் பெரும் கூட்டமாக ஆர்ப்பரிக்க வேண்டும்.

[இந்தக் கட்டுரை முதலில் சிங்களத்தில் ஜூலை 20, 2023 அன்று வெளியிடப்பட்டது]

“லயத்து கோழிகள்” தொழிலாளர்களின் வாழ்க்கையை புத்துயிர்க்கும் ஒரு கலைப் படைப்பு Read More »